(ஆர்.யசி)

"கொவிட் -19" கொரோனா  வைரஸ் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்றோ அல்லது "கொவிட் -19 "வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இறுதி நபரை குணப்படுத்திவிட்டோம் என்ற எந்தவொரு  சான்றிதழையும்  எம்மால் இன்னமும் வழங்க முடியாதுள்ளதாகவும், ஆகவே  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற காரணத்தினால் மக்களே தமது பாதுகாப்பு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவிக்கின்றது. 

அரசாங்கம் கவனமாக மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இது குறித்து தெளிவுபடுத்துகையில் கூறியதானது,

கடந்த காலங்களில் "கொவிட் -19 " கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்கள் "கொவிட் -19 "வைரஸ் தொற்றுநோய் மூலமாக தாக்கப்பட்டுள்ளனர் என்ற அறிகுறிகள் வெளிக்காட்ட முன்னரே நாம் அவர்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்திவிட்டோம். 

எனினும் இதில் பாரதூரமான விடயம் என்ன வெனில் கொழும்பு பகுதியில் அதிகளவில் நோய் தோற்று கண்டறியப்பட்டதேயாகும்.

கொழும்பு பிரதேசங்களை பொறுத்தவரையில் நபர்கள் அதிக இடங்களுக்கு பயணிப்பதும், பல நபர்களுடன் தொடர்புகளை பேணுவதும் வழமையாக கொண்டிருகின்ற காரணத்தினால் இந்த நோய் எத்தனை  பேரிடம் இன்னமும் பரவியுள்ளது என்பதில் எம்மால் சரியான நிலைப்பாடுகளை எடுக்க முடியாதுள்ளது. எனவே தொடர்ச்சியாக நாம் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த விடயத்தில் "கொவிட் -19" கொரோனா  வைரஸ் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது, கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இறுதி நபரை குணப்படுத்திவிட்டோம் என ஒரு சான்றிதழை எம்மால் இன்னமும் வழங்க முடியாத நிலையே உள்ளது.

எனவே இப்பொது ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படுகின்ற காரணத்தினால் மக்களே மிகக் கவனமாக தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் பொறுப்புடன், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி அடுத்தவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி செயற்பட வேண்டும். இதுவரை காலமாக மக்கள் கையாண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி மிக அவதானமாக எதிர்வரும் காலங்களில் செயற்பட வேண்டும்.

இந்த விடயத்தில் எமக்கும் மிகப்பெரிய பொறுப்புகள் உள்ளது, இதுவரை காலமாக நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டிய கடுமையான வேலைத்திட்டங்களை எம்மால் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எனவே மக்கள் சுகாதார அதிகாரிகள் கூறுவதை முழுமையாக பின்பற்றி செயற்பட வேண்டும். அரசாங்கமும் முடிந்தளவு மக்களை கட்டுபாட்டில் வைத்திருக்கவும், பாதுகாப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.