கொவிட் 19 நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தில் பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

இது விடயமாக கூடிய கவனம் செலுத்தி பெருந்தோட்ட மக்களுக்கும் நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்யுமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட அரச அதிபரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான  அ. அரவிந்தகுமார் பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமவிற்கு மின்னஞ்சலின் ஊடாக அனுப்பிய விசேட கடிதம் ஒன்றிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அக்கடிதத்தில், 'ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்படும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியமை குறித்து அனைத்து சுற்றறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களிலும் குறிப்பாக ஐயாயிரம் ரூபா வழங ;கும் விசேட வேலைத்திட்டத்திலும் பெருந்தோட்ட மக்களில் பெரும்பாலானோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கும் பட்டியல்களில் பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. 

இச்செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் புகார் செய்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத் துறையில் பெருந்தோட்ட மக்கள் அதிகூடிய பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய நெருக்கடி நிலையில் அம்மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலணியினால் விடுக்கப்படும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியமை குறித்து சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்படும் விடயங்களை பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் பாகுபாடின்றி விஸ்தரிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன்."

இக்கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ச மற்றும் பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு 'ஜனாதிபதி செயலணி மற்றும் பிரதமர் ஆகியோரினால் விடுக்கப்பட்டிருக்கும் PTF/01/S/01 மற்றும் PTF/03/2020 II  ஆகிய சுற்றறிக்கைகள், குறிப்பாக ஐயாயிரம் ரூபா நிவாரண உதவித் திட்டம் ஆகியவற்றை பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதி மக்களும் பயனடையும் விதத்தில் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்" என்று அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கடிதங்கள் மூலமாக உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இக்கடிதத்தின் பிரதியை பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும், பதுளை மாவட்ட அரச அதிபர் அனுப்பிவைத்துள்ளார்.