தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் அடையப்படுவதை உறுதி செய்யவேண்டுமென வலியுறுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை தவிர்க்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையும் பக்கச்சார்பின்மையும் அவற்றின் கௌரவமும் பாதுகாக்கப்படாத நிலை தொடர்வதன் காரணமாகவே தற்போதும் வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்று மக்கள் பலரும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைக்கான சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தகவலறியும் உரிமைக்கான சட்டமூலம் இந்த பாராளுமன்றத்தில் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே கொண்டு வரப்பட்டிருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. தகவல் அறியும் உரிமைக்கான சட்டமானது பல நாடுகளிலும் உள்ளது. இந்த சட்டமானது அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பலப்படுத்துகிறது. அதன் விளைவாகவே மக்கள் பலமடைகின்றனர்.
மக்களின் இறையாண்மை அரசாங்கம், நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகியவற்றில் தங்கியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் அதிகாரங்களை மக்களின் பெயரால் அனுபவிக்கின்றன.
ஆட்சி அதிகாரங்களை வெவ்வேறான ஆட்சிமுறை நிறுவனங்களான நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை என்பன அனுபவிக்கின்றன. இவை ஒன்றில் இன்னொன்று தலையீடு செய்துக் கொள்வதில்லை. ஜனநாயகத்தையும் மக்களின் இறைமையையும் பாதுகாப்பதற்கு தகவல் அறியும் உரிமை அடிப்படையாகும்.
மக்கள் தங்களது இறையாண்மை, ஜனநாயகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அர்த்தப்புஷ்டியான பங்களிப்பை வழங்க வேண்டும். அவ்வாறாயின் நாட்டில் இடம்பெறும் விடயங்கள் பற்றி குறிப்பாக ஆட்சிமுறை சம்பந்தமான விடயங்கள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும்.
அனைத்து தகவல்களையும் முழுமையாக அறியத்தருவதென்பது நடைமுறை சாத்தியமற்றதாகும். தேசிய நலன் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்த முடியாது. ஆட்சிமுறை பற்றி நம்பகரமானதும் துல்லியமானதுமான தகவல்களை மக்கள் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.
ஆட்சி என்பது குறித்தவொரு காலப்பகுதிக்கான பொறுப்பாளியாக உள்ளது. அதன் கடமைகளானது மக்களின் ஆய்வில் இருந்தும் பார்வையில் இருந்தும் விலகிச் செயல்பட முடியாது. தகவல்கள் வழங்கப்படும் போதே மக்கள் அதுபற்றி ஆய்வில் ஈடுபட முடியும். இதுவே இந்த சட்டத்திற்கான நியாயப்பாடாகும்.
இந்நாட்டில் அரசாங்கங்கள் மக்களுக்கு பதிலளிப்பதாக இருந்ததில்லை. தேர்தல் காலங்களில் மட்டுமே அரசாங்கங்கள் பதிலளித்துள்ளன.
இச்சட்டமூலத்தின் மூலம் இந்நிலைமையை மாற்றியமைக்க கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புள்ளது. வீண் விரயங்கள் மற்றும் ஊழல்களை தடுத்து, பாராளுமன்றத்தினால் ஏதுமொரு விடயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு பற்றி அறிந்துக்கொள்ள முடியும்.
எமது நாட்டில் நிறுவனங்கள் அரசியல்மயப்படுத்தப்படும் கலாசாரம் இருக்கிறது. நீதித்துறை கூட அதிலிருந்து தப்பியிருக்கவில்லை. இந்த நாட்டின் நீதித்துறை மீது ஒரு காலத்தில் கௌரவம் இருந்தது.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் பக்கச்சார்பின்மை பற்றிய அந்த கௌரவம் தொடர்ந்தும் நீடித்திருக்கவில்லை. இதன் விளைவாக சட்ட ஆட்சி பாதிக்கப்பட்டதுடன், அதன் பெறுபேறாக நாடும் பாதிப்புகளை சந்தித்தது. தற்போது கூட நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வெ ளிநாட்டு நீதிபதிகள் தேவை என்கின்ற நிலைமை காணப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்றே மக்கள் பலரும் கருதுகின்றனர்.
இச் சட்டமூலத்தின் உண்மையான நோக்கங்களை அடைவது என்றால், இச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிறுவனங்கள் சுயாதீனமாகவும் அச்சமின்றியும் செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும். இச்சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்தவொரு அரசியல்வாதிகளின் தலையீடுகளையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இச் சட்டமூலத்தின் கீழான நிறுவனங்களுக்கு மிகவும் பொறுப்பான கடமைகள் இருக்கின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM