கொரோனா வைரஸை முற்றாக அழிக்கும் கிருமிநாசினி ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறனர்.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்பொழுது உலகில் இரண்டு மில்லியனுக்கு மேல் மக்களை பாதித்து, ஒரு இலட்சத்துக்கும் மேலானவர்களை உயிர் பலி வாங்கி அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரஸை எப்படி ஒழிப்பது என தெரியாமல் உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவுகிறது.

இதை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்தவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கிருமி நாசினியை பயன்படுத்தினால் அவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். ஆனால் வைரஸை அழிக்க முடியாது.

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் குழு, வைரஸை முழுமையாக அழிக்கும் 'ஏ.யூ சானிடைசர்' என்ற புதிய கிருமிநாசினி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பல்கலைக்கழகத்தின் N.H.H.I.T என் ஹெச் எச்.ஐ.  எனப்படும் சுகாதார கருவிகள் மேம்பாட்டுக்கான தேசிய மையம் இந்த கிருமி நாசினியை உருவாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக இந்த மையத்தை சேர்ந்த பேராசிரியர் ஷங்கர் தெரிவித்ததாவது,

''நாங்கள் உருவாக்கியுள்ள கிருமிநாசினி கொரோனா வைரஸை அழிப்பதை அதன் மரபணு சோதனை மூலம் உறுதி படுத்தியுள்ளோம்.

ஏனெனில் கொரோனா வைரசும், நாங்கள் தயாரித்துள்ள கிருமி நாசினியும் ஒரே அமிலத்தை கொண்டுள்ளன. இது வைரஸை முற்றாக அழிக்கிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டொக்டர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோரிடமும் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் இந்த கிருமி நாசினி பயன்படுத்தினால், வைரஸ் பரவாமல் தடுப்பதுடன், முற்றாக அழித்து விடவும் முடியும்.

இந்த கிருமி நாசினியை கைகள், உடல் பகுதிகள், முகக் கவசங்கள், கையுறைகள், மருத்துவ உபகரணங்கள் என எதிலும் பயன்படுத்தலாம்.

இப்போது பயன்பாட்டில் உள்ள கிருமிநாசினிகளுடன் இந்த புதிய கிருமி நாசினியை சிறிதளவு கலந்தால் போதுமானது. இதனால் புதிய கிருமி நாசினியின் விலை அதிகரிப்பு குறைவாகவே இருக்கும்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இந்த கிருமி நாசினியை தெளித்தால், அல்லது மூக்கில் சில சொட்டுகள் விட்டால், வைரஸ் மற்றவர்களுக்கு பரவாது, தடுக்கப்பட்டு விடும். வைரஸும் அழிந்துவிடும்.

இதை இருநூறுக்கும் மேற்பட்ட மேற்பட்டவர்களிடம் பயன்படுத்தியதில், நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த கிருமிநாசினிக்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட அண்ணா பல்கலைக்கழகம் தயாராக உள்ளது.'' என்றார்.