இலங்கையிலிருந்து 30 பங்களாதேஷ் நாட்டினரையும், பங்களாதேஷிலிருந்து 290 அவுஸ்திரேலியர்களையும் அவர்களது நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு இலங்கை விமான ச‍ேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

கனேடியர்கள் மற்றும் அவுஸ்திரேலியர்கள் அடங்கிய 547 பேர் கொண்ட குழுவொன்று பங்களாதேஷின் டாக்காவிலிருந்து அவர்களது சொந்த நாடுகளுக்கு வியாழக்கிழமை மாலை தனித்தனி சிறப்பு விமானங்களிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி 257 கனேடியர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமானத்தின் மூலம் டாக்காவிலிருந்து வியாழன் இரவு 9.36 க்கு புறப்பட்டதாக ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை 290 அவுஸ்திரேலியர்கள் இலங்கை விமான சேவையின் சிறப்பு விமானத்தின் உதவியுடன் அதே நாளில் இரவு 9.07 மணிக்கு டாக்காவிலிருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இலங்கையிலிருந்து 30 பங்களாதேஷ் பிரஜைகளும் நாடு திரும்பியுள்ளதாக அந் நாட்டு சிவில் விமான அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

2020 மார்ச் 23 முதல் இதுவரை 6,526 வெளிநாட்டினர் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.