(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

மூளையை  பாராளுமன்றத்திற்கு கொண்டு வரவில்லை என பிரதியமைச்சர் நிரோஷன் பெரேராவும் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்  உதய பிரபாத் கம்மன்பிலவும் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது. 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல  விடைக்கான  வினாவின் போது ஆவணமோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியல்  வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்   உறுப்பினரான உதய பிரபாத் கம்மன்பில எம்.பி.யால் பிரதமரும்  தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதியமைச்சர் நிரோஷன் பெரேரா பதிலளித்துக்கொண்டிருந்தார். 

இலங்கை மத்திய  வங்கியினால் கொள்வனவு  செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்களின் பெறுமதிகள்  தொடர்பிலேயே  உதய பிரபாத் கம்மன்பில எம்.பி.கேள்வி எழுப்பியிருந்த நிலையில்  அதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர் நிரோஷன் பெரேரா  திருடர்கள், கள்வர்கள், ஆவண மோசடியாளர்கள்  போன்ற வார்த்தைகளை, பதிலளிக்கும் போது அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருந்தார். 

இதன் போது குறுக்கீடு செய்த கம்மன்பில எம்.பி.மோசடியில்  ஈடுபட்ட குற்றவாளிகளாக இனங்காணப்பட்டவர்களில் ஒருவரின்  பெயரையாவது கூற முடியுமா என கேட்டார். 

இதற்கு  பதிலளித்த பிரதியமைச்சர் நிரோஷன்  பெரேரா பூசனித் திருடனை  தோலைவைத்து பிடிக்க முடியும் என்றார்.  இதனால் கோபமடைந்த கம்மன்பில எம்.பி.பாராளுமன்றத்திற்கு வருகின்றபோது உங்களது  மூளையை வீட்டில் கழற்றி வைத்துவிட்டா வருகின்றீர்கள் எனக் கேட்டார். அத்தோடு  நீங்கள் மூளையுடன் வருகின்ற நாளில்  எனது மேலதிக வினாவைக் கேட்கின்றேன் என்றார்.  அதன்போது பிரதியமைச்சர்  நிரோஷன்  பெரேரா  நீங்கள் பாராளுமன்றம் வருகின்றபோது சிறைச்சாலையில் மூளையைக் கழற்றி வைத்து விட்டா வருகின்றீர்கள் எனக் கேள்வி கேட்டார். 

இதனால் இருவருக்குமிடையில்  வாய்த்தர்க்கம்  ஏற்பட்டது. எனினும் அவர்களது ஒலிவாங்கி முடுக்கி விடப்பட்டிருக்கவில்லை.   சிறிதுநேரம் இருவரும்  கைகளைக்காட்டி பரஸ்பரம் கருத்துக்களை வெளியிட்டவாறே இருந்தனர்.