(நா.தனுஜா)

இந்திய அரசாங்கம் ஊரடங்கை அமுல்படுத்தி, சமூகவிலகலை ஊக்குவித்திருக்காவிட்டால்  இம்மாதம் 15 ஆம் திகதியளவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 820,000 ஐயும் தாண்டியிருக்கும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியத் தூதரகம்,  எனினும் விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையினால்  தற்போது 12,000 நோயாளர்களே பதிவாகியுள்ளனர் என்றும் கூறியிருக்கிறது.

"கொவிட் - 19 கொரோனா வைரஸ் சவாலை இந்தியா எவ்வாறு கையாளுகிறது" என்ற தலைப்பில் இந்தியத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சுமார் 1.3 பில்லியன் மக்கள் சனத்தொகையைக் கொண்ட நாடொன்று கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதெனின், அதற்கு பெரும் முயற்சி எடுக்கவேண்டும்.

இன்றைய தினம் (ஏப்ரல் 16) வரையில் இந்தியாவில் 12380 கொரோனா வைரஸ் தொற்று நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 414 மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இந்திய அரசாங்கம் ஊரங்கை எதிர்வரும் மேமாதம் 3 ஆம் திகதி வரை நீடித்திருக்கின்ற போதிலும், இம்மாதம் 20 ஆம் திகதியிலிருந்து கைத்தொழில் மற்றும் விவசாய நடவடிக்கைகளைக் பகுதியளவில் மீளவும் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது.

கடந்த மாதம் 25 ஆம் திகதியிலிருந்து இந்தியாவில் ஊரங்கு அமுலுக்கு வந்தது. அதன் ஓரங்கமாக இந்திய வரலாற்றில் முதற்தடவையாக பயணிகள் ரயில் சேவையும் இடைநிறுத்தப்பட்டது.

வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கென 500 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளும், 5000 இற்கும் மேற்பட்ட மேலதிக சுகாதார சேவை வழங்கல்களும் தயார் செய்யப்பட்டன. 

அதன்கீழ் இந்திய ரயில் சேவையும் ரயில்களுக்குள் 40,000 படுக்கைகளுடன் கூடிய நோயாளிகளைத்  தனிமைப்படுத்தக் கூடிய கட்டமைப்பைத் தயார் செய்தது.

நாடு முடக்கப்பட்டமை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு மற்றும் சமூகவிலகல் ஆகியன நடைமுறைக்கு வராதிருப்பின் இம்மாதம் 15 ஆம் திகதியளவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 820,000 ஐயும் தாண்டியிருக்கும்.

எனினும் விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையினால்  தற்போது 12,000 நோயாளர்களே பதிவாகியிருக்கின்றனர். இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஊரடங்கை அமுல் செய்வதும் ஒன்றாகும்.

ஆனால் மேலும் பல துரித நடவடிக்கைகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க முடிந்திருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.