(நா.தனுஜா)

உலக  சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியை இடைநிறுத்துவது இலங்கை போன்ற நாடுகளை வெகுவாகப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

எனவே மனிதாபிமான ரீதியில் இத்தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி வழங்கலைத் தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். 

இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இன்றைய தினம் கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மீது ஐக்கிய அமெரிக்காவினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தியிருக்கிறேன். அவை பாரதூரமானவை என்பதுடன், உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையுமாகும். 

எனினும் இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலைமை காரணமாக உலகின் பெருமளவான நாடுகளைச் சேர்ந்த மக்களின் உயிர்கள் பலியாகியிருப்பதுடன், இதனால் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்ற எனது கருத்துடன் நீங்கள் உடன்படுவீர்கள் என்று நம்புகின்றேன். மேலும் எதிர்வரும் காலத்தில் ஏற்படத்தக்க சர்வதேச சுகாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகளுக்கான பூகோள தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு  அவசியமான தனது செயற்பாடுகளை உலக சுகாதார ஸ்தாபனம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.  

உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவியாக வருடாந்தம்  அமெரிக்காவின் வரிசெலுத்துவோரால் 400 - 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படுகின்றன. எனினும் அதற்கான  நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்டிருக்கும் தீர்மானம், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதை உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கும் இலங்கை போன்ற நாடுகளை வெகுவாகப் பாதிக்கும்.  

எனவே மனிதாபிமான ரீதியில் உங்களது தீர்மானத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான நிதியுதவி வழங்கலைத் தொடருமாறும், முறையான விசாரணைகளின் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.