முச்சக்கரவண்டியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்துசெல்ல தந்தை ஒருவரை அவரது மகன் ஒரு கிலோ மீற்றர் தூரம் சுமந்து சென்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குழத்துப்புழாவைச் சேர்ந்த முதியவர் ஜார்ஜ். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் அவருக்கான சிகிச்சை முடிந்து நேற்று (15ம் திகதி) வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்கு மனைவியும் மகனும் முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளனர்.. 

வீட்டிற்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தொங்கு பாலத்தில் முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்திய பொலிஸார், "ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக இதற்கு மேல் முச்சக்கரவண்டி செல்ல அனுமதி இல்லை" எனக் கூறினர். 

இதையடுத்து, நடக்க முடியாத நிலையில் இருந்த தந்தையை, அவரது மகன் ஒரு கிலோ மீற்றர் தூரம் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார். அப்போது, அவரது தாயாரும் நடந்தே உடன் சென்றார்.

இது குறித்த காணொளி வலைதளங்களில் வைரலானதையடுத்து, "உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்வதற்கு அனுமதித்திருக்கலாம்.

மகன் தனது தந்தையை சுமந்து செல்லும்போது, பல வாகனங்கள் கடந்து செல்கின்றன" என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தாக்கல் செய்துள்ளது.