சூர்யாவின் 'வாடிவாசலி'ன் பணிகளைத் தொடங்கிய வெற்றிமாறன்

16 Apr, 2020 | 11:47 AM
image

'அசுரன்' படத்தின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வாடிவாசல்' படத்தின் பணிகளை அவர் தொடங்கியிருக்கிறார்.

தமிழ் திரை உலகில் நாவல்களை திரைப்படமாக்குவதில் மறைந்த இயக்குனர் ஆர்சி சக்தியைத் தொடர்ந்து கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான 'விசாரணை' எழுத்தாளர் சந்திரகுமார் எழுதிய 'லொக்-அப்' என்ற நாவலையும், அதைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியைப் பெற்ற 'அசுரன்', எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்ற நாவலையும் மையமாகக் கொண்டது. 

தற்போது அவர் எழுத்தாளர் சி. சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' என்ற நாவலை மையமாகக்கொண்டு அதே பெயரில் திரைப்படமாக்குவதற்கான திரைக்கதையை எழுதிவருகிறார். இதில் கதையின் நாயகனாக சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய குழுவினருடன் இதற்கான திரைக்கதை அமைப்பதில் இறுதி நிலையை எட்டி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே வெற்றிமாறன் தயாரிப்பில்  உருவாகியிருக்கும் 'சங்க தலைவன்' என்ற திரைப்படமும், எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய 'தறியுடன்' என்ற நாவலை மையமாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தான் இயக்கும் படங்களும், தயாரிக்கும் படங்களும் நாவலை மையப்படுத்தி உருவாக்குவதால் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் வெற்றிமாறனுக்கு தனி மதிப்பும், மரியாதையும் கிடைத்திருப்பதாக இணையவாசிகள் பாராட்டி வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right