(நா.தனுஜா)

சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், இது குறித்து அனைத்துக் கட்சித்தலைவர்கள் பொதுச்செயலாளர்கள் கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பி வைத்திருக்கும் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

தற்போதைய சூழ்நிலையில் பொதுத்தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோருமாறு நீங்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரினதும் வரவேற்பைப் பெற்றமை இரகசியமன்று.

தேர்தல் குறித்த உங்களது நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்வதுடன், சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு இது பொருத்தமான தருணமல்ல என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 

தற்போது வரையில் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள அதேவேளை, தேர்தலை நடத்துவதாக இருப்பின் பெரும் எண்ணிக்கையானோரைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும். அது அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். அதுமாத்திரமன்றி தற்போது தேர்தலுக்காக செலவிடப்படக்கூடிய நிதியை, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதே மிகப் பொருத்தமானதாகும்.

இவற்றைக் கருத்திற்கொண்டு நீங்கள் அனுப்பி வைத்த கடிதத்திற்குப் பதிலாக ஜனாதிபதி செயலாளர், உங்களுக்கிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜூன் இரண்டாம் திகதிக்குப் பின்னர் தேர்தலை நடத்துமாறு கோரியிருக்கிறார். எனவே இது குறித்து அனைத்துக் கட்சித்தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கலந்துரையாடித் தீர்மானம் மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்