தென்னாபிரிக்க அணிக்கெதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. 

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது.

இந்நிலையில் மொஹாலியில் இடம்பெற்ற 1 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பெங்களுரில் இடம்பெற்ற 2 ஆவது போட்டி  மழையால் கைவிடப்பட்ட நிலையில் நாக்புரில் இடம்பெற்ற 3 ஆவது போட்டியில் இந்திய அணி 124 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை தன்வசப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 3 ஆம் திகதி டில்லியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக  ரஹானே 127 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் அபோர்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ஓட்டங்களைப்பெற்று 213 ஓட்டங்களால் பின்னிலை வகித்தது.

இதையடுத்து 213 ஓட்டங்கள் முன்னிலை வகிக்க இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.

இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு 480  ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணி வீரர்கள் போட்டியை சமன்செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்து வீண் போக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களைப்பெற்று 337 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதையடுத்த இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக ரஹானே தெரிவு செய்யப்பட்டதுடன் தொடர் ஆட்டநாயகனாக அஸ்வின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.