(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காகவும் நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிராகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
அத்தோடு வைரஸ் ஒழிப்பிற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைந்து தேசிய பொறிமுறையொன்றினை ஸ்தாபிக்காது ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட ஏகாதிபத்திய நிர்வாகத்தை நோக்கியே அரசாங்கம் செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு செயற்திட்டங்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் காணொளி மூலம் விசேட அறிவித்தலொன்றை விடுத்திருக்கும் அவர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :
கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. கொரோனா ஒழிப்பிற்காக எம்மால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய மக்கள் சக்தி என்ற ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம். இந்நிலையில் அரசாங்கமானது நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் புறந்தள்ளி சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. விசேடமாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
பாராளுமன்றத்திற்கு ஆகஸ்ட் மாதம் வரை காலம் இருந்த போதிலும் கூட, உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலாக மாறியிருந்த வேளையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதன் பின்னர் இலங்கையில் முதலாவது வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்ட போதிலும் கூட அதனைப் பொருட்படுத்தாமல் வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்த முடியாதென அறிவித்தது. அதற்கமைய தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. ஆணைக்குழு அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்திருக்காவிட்டால் இம் மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் வாக்களிப்பதற்கான சூழல் தற்போது உள்ளதா என்பதே எமது கேள்வியாகும். மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி எவ்வாறேனும் தேரத்லை நடத்துவதற்கே அரசாங்கம் முயற்சித்தது.
தற்போது புதிய சிக்கலொன்று தோன்றியுள்ளது. அதாவது அரசியலமைப்பிற்கு ஏற்ப பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும். அதற்கமைய ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெற வேண்டும் என்றும் அதற்காக மே மாத நடுப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது தேர்தலை நடத்தக் கூடிய சூழல் நாட்டில் இல்லை.
எனவே இது தொடர்பிலான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் செயற்ப்படுவதை விடுத்து, தேர்தல்கள் ஆணைகுழுவுக்கு அழுத்தம் பிரயோகித்து எவ்வாறேனும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசாங்கம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக பொது மக்கள் பெரும் அர்ப்பணிப்புடன் பாடுபடுகின்றனர். சுகாதாரத்துறையினர், பாதுகாப்புபடை உள்ளிட்ட ஏனைய அரச அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர்.
ஆனால் இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாது மக்கள் பாதுகாப்பையும் புறந்தள்ளி அவசர அவசரமாக தேர்தலை நடத்த முயற்சிப்பதன் நோக்கம் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதேயாகும். இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள வைரஸ் பரவலை மீண்டும் தீவிரப்படுத்தும் வகையிலான செயற்பாடாகும்.
மே மாதம் முதலாம் வாரத்துக்குள் பெருமளவான வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படுவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சில மாவட்டங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறேனும் மே மாத இறுதிப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால் அது மிகவும் பாரதூரமானதாகும்.
தேர்தல் நடத்தப்படுவது அத்தியாவசியமானதாகும். ஆனால் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சூழல் தொடர்பிர் ஆராய்ந்து உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சிகளை பொது மக்கள் சந்திக்க வேண்டும், தமது கொள்ளை பிரகடனங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றுக்கு மேலதிகமாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல் சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லாத போது தேர்தல் நடத்தப்பட்டால் அது ஜனநாயக விரோதமாகும். அரசாங்கம் இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆர்வமாகவுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.
பாராளுமன்றத்தைத் செயலற்றதாக்கி ஏகாத்திபத்திய ஆட்சிக்கு செல்லவே அரசாங்கம் முயற்சிப்பதாகவே நாம் கருதுகின்றோம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தேசிய பொறிமுறையொன்றினை ஸ்தாபிக்குமாறு நாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளோம். எனினும் ஒரு குறிப்பிட்ட அரசியல் குழுவினரை மாத்திரம் இதில் ஈடுபடுத்தி தனிநபர் செயற்பாட்டினையே அரசாங்கம் முன்னெடுக்கிறது.
அத்தோடு ஒரு இனவாதம் தூண்டிவிடப்படுகிறது. போலியான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதன் மூலம் அரசாங்கத்தை விமர்ப்பதற்கு மக்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானதாகும். எனவே கொரோனா வைரஸ் ஒழிப்போடு நாட்டில் தற்போது தலைதூக்கியுள்ள ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மக்களின் வாக்களிப்பு உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் தேசிய மக்கள் சக்தி தயாரகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM