(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டதை ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசியல் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வித அரசியல் நோக்கங்களையும் அடிப்படையாக்க் கொண்டு  அவர் கைது செய்யப்படவில்லை என  துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விழைவித்தார். என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுகின்றது.

இவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதை எதிர்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிர்தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து  தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக பெயரளவில் மாத்திரமே குறிப்பிடப்படுகின்றது.

பாராளுமன்றத்தை கூட்டினால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

பொதுத்தேர்தல் இடம்பெற்று புதிய பாராளுமன்றம் கூடும் வரை கலைக்கப்பட்ட பாராளுமன்றம் ஒருபோதும் மீண்டும் கூட்டப்படாது என்றார்.