கொரோனாவுக்கு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொலை - இந்தியாவில் சம்பவம்

By J.G.Stephan

15 Apr, 2020 | 10:19 AM
image

இந்தியா, பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 27 ஆம் திகதி இருவரும் சொந்த ஊர் திரும்பியுள்ள நிலையில்,  குறித்த கர்ப்பிணிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் அவரை அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததால் உடனே அவரை வைத்தியசாலையில் உள்ள தனியறையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ள நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 3 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.

வீடு திரும்பிய 3 ஆவது நாளில் அந்த பெண்ணுக்கு இரத்தப்போக்கு அதிகமாகிய நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வைத்தியசாலையின் தனி அறையில் வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கர்ப்பிணியை தொடர்ந்து 2 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதனாலேயே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்துவிட்டதாகவும் பெண்ணின் மாமியார் புகார் கூறினார்.

இதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தியதில், வைத்தியசாலை ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய அதிகாரிகளும் விசாரணை நடாத்தியுள்ளனர்.

கர்ப்பிணி பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி, கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு கயா மாவட்ட நிர்வாகத்திடம் மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்து இருக்கின்றமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right