கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்  அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை அண்டிய பிரதான வீதியை  ஊடறுத்து செல்லும் கழியோடை ஆற்றில் அதிகளவிலான முதலைகள் பெருகி வருகின்றது.

இப்பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதுடன் மக்களின் நடமாட்டம் இன்மையினால், வீதியோரங்களில் நடமாடி திரிகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான  சுமார் 9, 5,4 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.மேலும் தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் புல் மேயும் எருமை மாடுகள் முதலைகளினால் இரைக்குள்ளாகின்றது.

தற்போது இப்பகுதியில்  இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் கட்டாக்காலிகளாக இப்பகுதியில் திரியும் மாடுகளே இம்முதலைகளுக்கு இரையாகுவதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்படி  பகுதிகளில்  முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன்,  முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.இதேவேளை, யானை கூட்டம் ஒன்றும் திடீரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையில் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றது.சுமார் 35 க்கும் அதிகளவான யானைகள் செவ்வாய்கிழமை (14.04.2020) மாலை அப்பகுதியில்  நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக  நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர்.மேலும், இப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு  வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.