( ரி.விரூஷன் ) 

யாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்கும் மாணவிகள் சிலருடன் தகாதமுறையில் நடந்து கொண்டதையடுத்து குறித்த ஆசிரியரை கைதுசெய்து அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாடசாலை மாணவர்களும் பழைய மாணவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

அத்துடன் இக் கோரிக்கையை முன்வைத்து பாரிய போராட்டம் ஒன்றையும் அவர்கள் நடாத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உறுதிமொழி அளித்ததன் பின்னர் அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரை கைதுசெய்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முட்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் இவ் வழக்கு விசாரணையில் குறித்த ஆசிரியரை எதிர்வரும் ஜூலை மாதம்  4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.  நீதிவான் சதீஸ்கரன் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.