(நா.தனுஜா)

சீனத்தூதகரத்தின் டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தம் தவறுதலாக இடம்பெற்றது என டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளமை தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கும் தூதரகம்,  கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கு நேற்று திங்கட்கிழமை டுவிட்டர் நிர்வாகத்தினால் இடைநிறுத்தப்பட்டது.

அதற்கான விளக்கங்கள் எவையும் நேற்று வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதுகுறித்து சீன தூதரகம் இன்று செவ்வாய்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

டுவிட்டர் நிர்வாகம் பிரத்தியேக காரணங்கள் எதனையும் கூறாமல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கை இடைநிறுத்தியது.

இதுகுறித்த தவறான புரிதல்கள் ஏற்படுவதையும், மக்கள் மத்தியில் ஊகங்கள் பரப்பப்படுவதையும் தவிர்ப்பதற்காக தூதரகத்தின் டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துமாறும், குறித்த தீர்மானத்தைத் திருத்திக் கொள்ளுமாறும் இருமுறை டுவிட்டர் நிர்வாகத்திடம் தூதரகம் பணிவான வேண்டுகோளை முன்வைத்தது.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகம் உத்தியோகபூர்வமான பதிலை வழங்கியதுடன், தூதகரத்தின் டுவிட்டர் கணக்கு இடைநிறுத்தம் தவறுதலாக இடம்பெற்றது என்றும் அதனை நீக்குவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த 'தவறுதலாக இடம்பெற்ற தவறு' குறித்து சீனத்தூதரகம் விசனமடையும் அதேவேளை, இனவாத தவறான தகவல்கள் பரப்பப்படாததும் முறையின்றிப் பயன்படுத்தப்படாததுமான வேளைகளில்  கருத்துச் சுதந்திரம்  மதிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளது.