(செ.தேன்மொழி)

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 20 ஆம் திகதி  திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாதிவெல குடியிருப்பு தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தகாலப்பகுதியில்  எவ்வித அனுமதியுமின்றி ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் நபரொருவர் மாதிவெலயிலுள்ள வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது குடியிருப்பின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அந்த நபரிடம் ஊரடங்கு காலப்பகுதியில் பிரவேசிப்பதற்காக வழங்கப்படும் அனுமதிப்பத்திரமும் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நபரை ரஞ்சன் ராமநாயக்கவின்  வீட்டுக்குள் பிரவேசிக்க விடாது பொலிஸார் தடுத்துள்ளனர். 

பின்னர் அவ்விடத்திற்கு வந்த ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாருடன் முரண்பட்டுள்ளதுடன் இந்த நபரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். 

இதனையடுத்தே பொலிஸார் இது தொடர்பில் மிரிஹான பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதுடன் பின்னர் அங்கு வந்த மிரிஹான பொலிஸார் ரஞ்சன் ராமநாயக்கவையும் அவரை சந்திக்க வந்த நபரையும் கைது செய்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை அதற்கான உதவி ஒத்தாசைகளை வழங்கிமை மற்றும் பொலிஸாரின் கடைமைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும்  மற்றைய நபரும்  இன்று செவ்வாய்கிழமை நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

இதன்போது நீதிவான் ரஞ்சனை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன்  இதன்போது கைது செய்யப்பட்ட மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.