பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் மீது கடந்த 2009 ஆண்டு தாக்குதல் மேற்கொண்ட 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று (22) குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களில் மூவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஏனைய மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை விசாரணை தொடர்பான அரச தரப்பு சாட்சியங்களை எதிர்வரும் ஜுலை 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொஸின் ரஷிட் மற்றும் அப்துல் ரஹ்மான் என்ற இருவரை குற்றவாளிகள் என பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இலங்கை அணி வீரர்கள் காயமடைந்ததுடன், பாதுகாப்பில் ஈடுபட்ட 6 பொலிஸார் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.