அறுபது வருட காலச்சுற்றில் 34 ஆவது வருடமாக சார்வரி எனும் புதுவருடம், 2020 ஏப்ரல் 13 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னரவு 07.26 க்கு பிறக்கின்றது.

அன்று மாலை 03.26 முதல் முன்னிரவு 11.26 வரை விஷ புண்ணியகாலமாகும். 

இம்முறை புத்தாண்டு முன்னிரவில் பிறப்பதால், அதன் பின்வரும் சூரிய உதயகால மறுதினமே அதாவது, 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையே புதுவருடப் பிறப்பாக கொள்வது முறையாகும். விஷ புண்ணிய காலத்திலோ அல்லது மறுதினத்திலோ  சூரிய உதயகாலத்தின்  முன்பாக  மருத்து நீர் வைத்து நீராடுவது உத்தமமாகும். 

எனினும் இவ்வருடம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசௌகரிய நிலையின் காரணமாக, ஆலயங்களுக்கு சென்று மருத்து நீர் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

இந்நிலையில், இல்லங்களிலேயே  அதற்கான மூலப்பொருட்கள் கிடைக்குமிடத்து, வீட்டிலேயே மருத்து நீர் தயாரித்துக்கொள்ளலாம்.

அந்தவகையில், தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு இவைகளை சுத்தமாக நீரில் கொதிக்க வைத்து காய்ச்சி நீராடலாம்.

எனினும் நடைமுறையில் இவைகள் பெற்றுக்கொள்வது என்பது சாத்தியமில்லை என்பதால், இந்துக்கள் யாவரும் குழப்பமடையாது, தமது வீடுகளுக்கு அருகில் கிடைக்கக்கூடிய அறுகு, துளசி, வேப்பிலை ஆகியவற்றை மஞ்சள் கலந்த சுத்த நீரில் இட்டு, நன்கு கொதிக்க வைத்து காய்ச்சி சிரசிலும், பாதத்திலும் வைத்து  நீராடுவது காலோசிதமாகும்.

ஆடம்பரங்களை தவிர்த்து சம்பிரதாயங்களை பின்பற்ற வேண்டும். அத்துடன் புதுவருட புதிய ஆடையாக வெண்நிறப்பட்டாடை இம்முறை குறிப்பிடப்பட்டிருப்பினும் அவற்றை வாங்கவோ, அணியவோ சூழ்நிலை, மனநிலை இல்லாத காரணத்தினால், கந்தையானாலும் கசக்கிக்கட்டு என்பதாக தூய்மையான வெண்நிறத்திலான நமது வழமையாக பாவித்த ஆடையாயினும் இல்லங்களில் இருந்து ஆடம்பரங்களை தவிர்த்து அமைதியாக உலக நலன் வேண்டி பிரார்த்திப்போமாக...!

சிவஸ்ரீ. பால.ரவிசங்கர சிவாச்சாரியார்