அதி அபாய வலயத்திலிருந்து மீண்ட இரத்தினபுரி, பெல்மதுளை : கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்தது

12 Apr, 2020 | 10:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் அல்லது கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த அதி அபாய வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று முதல், அபாய வலயத்திலிருந்து மீக்கப்பட்டுள்ளன.

சுகாதார, பதுகாப்புத் தரப்பினர் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இந் நிலையில் தர்போது குறித்த இரு பொலிஸ் பிரிவுகளும்  இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய  பகுதிகளுக்கு உரிய ஊரடங்கு விதிகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந் நிலையில் இன்று , கொரோனா தொற்றுக்கு உள்ளான பேருவளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் மட்டக்களப்பு, புனாணை தனிமைபப்டுத்தல் முகாமில் இருந்து அடையளம் காணப்பட்டதை அடுத்து,  இலங்கையில் கொரோனா தொற்றால்  அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கை 200 ஐ கடந்தது.

அதன்படி  இன்று இரவு 8.00 மணி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 203 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

அந்த 203 பேரில் 7 பேர்  உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 56 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும் 140 தொற்றாளர்கள்  தொடர்ந்து கொரோனா தொற்றாளர்களுக்கு என சிகிச்சையளிக்க வேறாக்கப்பட்டுள்ள மூன்று வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைவிட கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் , 154 பேர் நாடளாவிய ரீதியில்  24 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்த அதி அபாய பிரதேசங்களாக மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களும், புத்தளம், கண்டி மற்றும் யாழ். மாவட்டங்களும் தொடர்ந்தும் நீடிக்கின்றன. அந்த பகுதிகளில் ஊரடங்கு மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறான பின்னணியில், அந்த அதி அபாய வட்டத்துக்குள் இருந்த இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இன்று அதிலிருந்து நீக்கப்பட்டன.

இரத்தினபுரி  பகுதியின் மாணிக்கக் கல் வர்த்தகர் ஒருவரும் அவரது குடும்பத்தருமாக 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து குறித்த இரு பொலிஸ் பிரிவுகள் அதி அபாய பகுதிகளாக பெயரிடப்பட்டன.

இந் நிலையில் அந்த குடும்பத்தாருடன் தொடர்புகளைப் பேணிய இரத்தினபுரி மற்றும் நிவித்திகலை பகுதிகளைச் சேர்ந்த 73 பேர் இராணுவத்தினரால் தியத்தலாவை  முகாமின் தனிமைப்படுத்தல் முகாமுக்கு  அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் மீள அவர்களது வீடுகளுக்கே இன்று அனுப்பப்பட்டனர். இந் நிலையிலேயே குறித்த இரு  பொலிஸ் பிரிவுகளும் அதி அபாய வலயத்தில் இருந்து நீக்கப்ப்ட்டுள்ளன.

 இந் நிலையில் கொரோனா அறிகுறிகள் இல்லாமல் சமூகத்தின் மத்தியில் உள்ள தொற்றாளர்கள் காரணமாக பாரிய சிக்கல் ஏற்படலாம் எனும் அச்சம் உள்ள நிலையில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் அவர்களுடன் பழகிய அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள் முன்னெடுக்கும் இந்த பரிசோதனைகள் தொடர்பில், இராணுவத்தினரும் தனியாக தமது பங்கிற்கு  பரிசோதனைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

அத்துடன் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இன்று வரை மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டிருந்தனர். மேல் மாகாணத்தில் மொத்தமாக  இன்று வரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் ( மட்டு தனிமைபப்டுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்ட நால்வர் உட்பட) 100 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 

கொழும்பு மாவட்டத்தில் 45 தொற்றாளர்களும்  களுத்துறையில் 32 தொற்றாளர்களும் கம்பஹாவில் 23 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனைவிட புத்தளத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றளர்கள் எண்ணிக்கை 34 ஆகும்.

 இவ்வாறான நிலையில்  அதிக தொற்றாளர்களைக் கொன்டுள்ள கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் பரிசோதனைகளை முன்னெடுக்க நடமாடும் பரிசோதனைக் கூடமொன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

 கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனை இந்த நடமாடும் பரிசோதனை கூடத்தை தயார் செய்துள்ளது.

அதன்படி அந்த நடமாடும் பரிசோதனை கூடமானது இன்று இரத்மலானையில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு சென்று, அங்குள்ளவர்களின் மாதிரிகளை பெற்றுக்கொன்டது. '

இதுவரை தொற்றாளர்கள் என்ற சந்தேகத்தில் மக்களை நாம் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றே பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெற்றோம். தற்போது இலங்கையில் முதன் முதலாக நடமாடும் பரிசோதனை கூடத்தை நாம் உருவாக்கியுள்ளோம். இப்போது நாம் மக்களிடம் போய் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைகளை முன்னெடுக்க முடியும்' என கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  வைத்தியர் இந்திக ஜயகொடி தெரிவித்தார்.

இந் நிலையில், கொழும்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000 பேர் வரை தனிமைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன, அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியுள்ளதாக  தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் பல  முக்கிய நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள நிலையில், அந் நிறுவனங்கள் தமது வேலைகளை ஆரம்பிக்க முன்னர் தமது ஊழியர்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கோ அல்லது உகந்த சுகாதார சோதனைகளுக்கோ உட்படுத்தி உறுதி செய்துகொண்ட பின்னர்  அந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பது உகந்ததாக அமையும் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right