(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக மேல் மாகாணத்தின் வடக்கு பகுதி தற்போது பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
ஜா-எல பகுதியில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் தொடர்பாடல் வலையமைப்பு மற்றும் அதன் விசாலம் தொடர்பில் சுகாதாரத்துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் வெளிப்படுத்திக்கொண்டுள்ள தகவல்களுக்கு அமைய சுகாதார தரப்பினர் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந் நிலையில் குறித்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் தொடர்பாடல் வலையமைப்பினரை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போதும் பாதுகப்புத் தரப்பினருடன் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், ஜா -எல சுதுவெல்ல, ஜா-எல நகர் பகுதி மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் ஜா-எல – சுதுவெல்ல பகுதியில் கடந்த வெள்ளியன்று பின் இரவில் அடையாளம் காணப்பட்டனர்.
அப்பகுதியின் 6 பேரில் ஐந்து பேர் ஒலுவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே வெளிப்படுத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் 5 பேரும் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலானோருடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
' மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதால் அவர்களை கட்டுப்படுத்துவது கடினம். முதலாம் நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் அவர், அவரது 7 மாத குழந்தையுடன் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.' என ஜா-எல பொது சுகாதார பரிசோதகர் கே.ஏ. அனுர அபேரத்ன தெரிவித்தார்.
கடந்த வார ஆரம்பத்தில் ஜா எல பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியான இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளகியுள்ளமை ராகம வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது.
குறித்த முச்சக்கர வண்டி சாரதிக்கு பெரும் எண்ணிக்கையிலான நபர்களுடன் தொடர்புகள் இருந்த நிலையில், அவரது தொடர்பாடல் வலையமைப்பை கருத்தில் கொண்டு ஜா எல சுதுவெல்ல, பாரிஸ் பெரேரா மாவத்தை, கறுப்புப் பாலம் பகுதி உள்ளிட்டவை முடக்கப்பட்டன.
சுதுவெல்ல - ஸ்வர்ன ஹங்சவில பகுதியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி, மருதானையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த நபருடன் தொடர்புபட்டவர் என சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டினர்.
இந் நிலையில் அந்த சாரதியுடன் பழகிய அனைவரையும் தனிமைப்படுத்தலில் ஈடுபட சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை ஆலோசனை வழங்கியிருந்தது.
எனினும் அதனை பொருட்படுத்தாது, முழு பிரதேசமெங்கும் உலாவிய போதைப் பொருளுக்கு அடிமையான 23 பேர் கடற்படையின் உளவுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு ஒலுவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களை அங்கு அழைத்து செல்ல முன்னர், அவர்களின் சளி மாதிரிகள் பி.சி.ஆர். எனும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காக எடுக்கப்பட்டன. அதன் முடிவுகள் கடந்த வெள்ளியின்பின் இரவில் வெளிப்படுத்தப்பட்டன. அதன் போது, அந்த 23 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இந் நிலையில் அவர்களில் ஒருவரின் மனைவிக்கும் கொரோனா தொற்றிருப்பது ராகம வைத்தியசாலை பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் ஒரே இரவில் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த நிலையில்,
தற்போது மேல் மாகாணத்தின் வடக்கு பகுதியில் விஷேட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொற்றுக்குள்ளானவர்கள் என கண்டறியப்பட்ட 6 பேரும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த முதலாவது தொற்றாளரின் நெருங்கிய நண்பர்கள் என்பதுடன் அந்தப் பகுதியில் சுமார் 6000 பேர் வாழ்கின்றனர்.
கடற்படையினரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகள் இந்த விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டோர் பழகிய கம்பஹா மாவட்டத்தின் மாகேவிட்ட, ஜா எல உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 பேர் ஓரிடத்தில் திரட்டப்பட்டு, அவர்களின் சளி மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்காக பெறப்பட்டன.
இதில் 42 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதில் 6 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர்கள் ஒலுவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர். அதன் பெறுபேறுகள் நாளை வெளிப்படலாம் என ஆய்வுகூட தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறான பின்னனியிலேயே இன்று, ராகமை மற்றும் வெலிசறை வைத்தியசாலைகளின் சுகாதார ஊழியர்கள் 27 பேர் மன்னார், முழங்காவில் கடற்படை முகாமில் உள்ள தனிமைப்படுத்தும் மத்திய நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ராகமை வைத்தியசாலை என அறியப்படும் கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையின் 22 சுகாதார ஊழியர்களும் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையின் 5 சுகாதார ஊழியர்களும் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக முழங்காவில் முகாமுக்கு அனுப்பப்பட்டதாக கடற்படையினர் கூறினர்.
ஜாஎல – சுதுவெல்ல கிராமத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்த ராகமை போதனா வைத்தியசாலையின் ஊழியர் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் தற்போது மேல் மாகாணத்தின் வடக்கு பகுதியின் முக்கிய இடமான ஜா-எல பகுதியில் கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களில் அனேகர் போதைப் பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் என்பதாலும் அவர்களின் தொடர்பு வட்டம் விசாலமானது என்பதாலும் அப்பகுதி முழுவதும் கடும் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளது.
இந் நிலையிலேயே பாதுகப்புத் தரப்பு உளவுத் துறையுடன் இணைந்து தொடர்பு வட்டத்துக்குள் உள்ளோரை கண்டறிய விஷேட நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், சுகாதார அதிகாரிகள் அதற்கான பூரண வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர்.