(இராஜதுரை ஹஷான்)

மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து மரக்கறி, மீன் ஆகியவற்றை கொள்வனவு செய்து அனைத்து பிரதேச சபை ஊடாக பகிர்ந்தளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 7 1/2 இலட்சம் மெட்ரிக் டொன் மரக்கறிகள் கொள்வனவு  செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை தொடர்பான ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுகாதார துறையினரது பரிந்துரைக்கு அமையவே மொத்த விற்பனை மத்திய நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் விவசாயிகள் பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டார்கள். இதனை கருத்திற் கொண்டு அரசாங்கம் முதன் முறையாக மொத்த விற்பனை மத்திய நிலையங்களில் இருந்து மரகறி மற்றும் மீன் ஆகியவற்றை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது.

நுவரெலியா மொத்த விற்பனை மத்திய நிலையத்திற்கு மரகறிகளை விநியோகிக்கும் விவசாயிகளிடமிருந்து  35 ஆயிரம் மெட்ரிக் டொன் மரகறி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மரகறிகள் 35 லொறிகள் ஊடாக கொழும்பு- மாநகர சபை, கொடிக்காவத்த, முல்லேரியா நகர சபை, கடுவெல, மொரட்டுவ ,பொரலஸ்கமுவ, பியகம, களுத்துறை, வல்லாவிட,தொடங்கொட, மாத்தறை, பயாகல, கம்பளை, அநுராதபுரம் , கிழக்கு நுவரகம, மதவாச்சி, கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேசங்கள் ஊடாக  பகிர்ந்தளிக்கப்படும்.

தம்புள்ளை மொத்த விற்பனை மத்திய நிலையம் ஊடாக 4 இலட்சம் மரக்கறிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இம் மரக்கறிகள் 50 லொறிகள் ஊடாக லக்கல, நாவுல, பல்லேகல, கலேவெல ஆகிய பிரதேச சபை ஊடாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.