(ஆர்.யசி)

சிங்கபூர் மற்றும் கட்டார்  விமான நிலையங்களை சிக்கத்தவித்த 14 இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை விமானநிலையத்தை  வந்தடைந்தனர்.

இவ்வாறு வந்தவர்களை  21 நாட்கள் தனிமைப்படுj்தல் நடவடிக்கைகளுக்காக தியத்தலாவ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

"கொவிட்  -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையிலான  பயணத்  தடைகள் விதிக்கப்பட்டுள்ளதை  அடுத்து இலங்கைக்கு வர முடியாது வெளிநாட்டு விமான நிலையங்களில் சிக்கத்தவிக்கும் 33 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பது  குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுப்பதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய அவர்களை ஒரு வார காலத்தினுள் மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்த நிலையில் முதல் கட்டமாக 14 பேர் இவ்வாறு இன்று நாட்டுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சிங்கபூர் மற்றும் கட்டார் டோகா நகரில் இருந்து இவ்வாறு 14 இலங்கையர்களை வரவழைத்துள்ளதாகவும் இவர்கள் உடனடியாக தியத்தலாவ தனிமைப்படுதல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது. இவர்கள் தொடர்ச்சியாக 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி  அவர்களின் நிலைமைகளை கண்காணித்த பின்னர் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் இருந்தால் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் எஞ்சியுள்ள 19 இலங்கையர்களையும் உடனடியாக நாட்டிற்கு வரவழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் தூதரகங்களுக்கு இப்போதே தகவல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் அவர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு தனிமைப்படுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு அவரவர் வீடுகளுக்கு செல்ல அனுபதிக்கப்படுவார்கள் எனவும் வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.