வீடொன்றில் வெளிநாட்டவர் எவராவது தங்கியிருக்கக்கூடும் என்று பதுளை பொலிஸாருக்கும் பதுளை மாநாகர சபை பரிசோதகர்களுக்கும் கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவ்வீட்டில் கசிப்பு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

அலுத்வெலகம என்ற இடத்தைச் சேர்ந்த வீடொன்றிலேயே மேற்படி சம்பவம் 11.04.2020 இரவு (நேற்று) இடம்பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரியவருகையில், 

அலுத்வெலகம என்ற இடத்தில் இத்தாலி நாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் இரவு வேளையில் சிலர் மறைந்திருப்பதாகவும் அவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸாருக்கும் பதுளை மாநகர சபை சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவிக்கபட்டது.

இதனையடுத்து பொலிஸாரும் சுகாதாரப் பரிசோதகர்களும் குறிப்பிட்ட வீட்டைச் சுற்றிவளைத்து சோதனையிட்டபோது அவ்வீட்டில் வெற்றுச் சாராயப் போத்தல்கள் பலவற்றை மட்டுமே கண்டுபிடித்தனர்.

வேறு எந்தவொரு நபரையும் அங்கு காண முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பக்கத்திலுள்ள பிரிதொரு வீட்டைச் சோதனையிட்ட பொலிசார் அங்கு கசிப்பு காய்ச்சும் பீப்பாய்கள் மற்றும் உபகரணங்கள், கோடா என்றழைக்கப்படுகின்ற கசிப்பிற்கான மூலப் பொருட்கள் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த பெருமளவான கசிப்பு நிரப்பப்பட்ட போத்தல்கள் ஆகியவற்றையும் பொலிஸார் கண்டு பிடித்து மீட்டனர்.

அத்துடன் கசிப்பு தயாரிப்பவரையும் பொலிஸார் கைது செய்தனர். அந்நபரை விசாரணை செய்த போது தயாரிக்கப்பட்ட  கசிப்பினை இத்தாலி நாட்டில் வசிப்பவரின் வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். 

மேலதிக விசாரணை முன்னெடுத்துள்ள பொலிஸார் அந்நபரை இன்றைய தினம் பதுளை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.