(செ.தேன்மொழி)

சம்மாந்துரை - நிந்தவூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துரை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துரை பொலிஸாரும், கல்முனை பகுதியின் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது நிந்தவூர் பகுதியயிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் மிக சூட்சுமுகமான முறையில் ஹெரோயின் போதைப் பொருளை பொதிச் செய்துக் கொண்டிருந்துள்ளனர். இவர்களிடமிருந்து 58 கிராம் 80 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 23 - 34 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.