(ஆர்.ராம்)

விலைமதிப்பற்ற உயிர்களை கொரோனா காவுகொண்டுவரும் ஏக காலத்தில் அதன் தாக்கங்கள், பல தரப்பினருக்கு காலங்கடந்த ஞானத்தினை வழங்கியிருக்கின்றது. குறிப்பாக உலகை ஆட்சி செய்ய போட்டியிட்டு வருபவர்களும், விஞ்ஞான தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக மார்ப்பு தட்டியவர்களும் விழி பிதுங்கி வழிமாறி நிற்கின்றார்கள்.

இத்தகையதொரு சூழலில் காலங்கடந்தாவது தன்னிலை உணர்ந்து தன்கடமையை அறிந்து அதிகார அறைகூவல் விடுக்கும் நிலைமையொன்றை கொரோனா உலக கட்டமைப்பொன்றுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஆம், 1945இல் இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்திருந்த நிலையில் உலக ஒழுங்கு புதிய சித்தாந்தத்தினை நோக்கி வெகுவாக நகர்ந்தது. அழிவுகளும், இழப்புக்களும் ஏற்படுத்திய படிப்பினையால் உலகத்தில் அமையும் சமாதானமும் இன்றியமையாதது என்ற சிந்தனைக்கு அடித்தளமிட்டிருந்தது.

அதனடிப்படையில்,  கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆக்கிரமிப்புகளை ஒடுக்குதல், சர்வதேச சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல், மக்களின் சம உரிமைகளையும் சுயநிர்ணய உரிமைகளையும் மதித்தல் உள்ளிட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு 1945 ஒக்டோபரில் இல் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.

இந்த கட்டமைப்பின் பிரகாரம் உலகம் 'சமத்துவம்' என்ற கோட்பாட்டினை உள்ளீர்த்து அமைதி, சமாதானம், பரஸ்பர நட்புறவுடன் சுபீட்சத்தினை நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறான நிலைமைகள் ஏற்படவில்லை. சமநிலையற்ற வளங்களும், அதிகார வேட்கைகளும், ஆயுத வர்த்தக சந்தைகளும், வறுமையும், உரிமை மறுப்புக்களும் அதற்கு இடமளித்திருக்கவில்லை.

உலக சமாதனத்தின் விரும்பிகளாக ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாகின்றோம் என்று வாக்குறுதியளித்து உறுப்புரிமையை ஏறக்குறைய அனைத்து உலகின் அனைத்து நாடுகளும், பெற்றபோதும் 1945இலிருந்து இறுதியாக 2009 இல் இலங்கையில் நிறைவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட உள்நாட்டுப் போர் வரையில் ஆயுத மோதல்களும், கிளர்ச்சிகளும், புரட்சிகளும், அரசகவிழ்ப்பு போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்திருக்கின்றன. தற்போதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான மனித குலத்துக்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேறுகின்றபோதெல்லாம் அமைதிக்காக, சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா சபை கண்டன அறிக்கைகளை வெளியிட்டதை தவிர அதற்கு அப்பால் சென்று செய்வதறியாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைமையிலேயே இருந்தது. 

குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரின் போது ஐக்கிய நாடுகள் சபை  தமது பொறுப்பினை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை அச்சபையின்  பொது செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளமை அதற்கு தக்க சான்று பகர்வதாக இருக்கின்றது.

ஐ.நா செயற்றிறன் அற்றிருப்பதற்கு, ஐ.நா சபையின் கட்டமைப்புக்களின் உயர் நிருவாகத்தில் வல்லரசு நாடுகள் உறுப்புரிமையை கொண்டிருந்தமையும், ஐ.நா.கட்டமைப்புக்களின் இயக்கத்தின் பின்னணியில் வல்லரசு நாடுகளின் நிதிப்பங்களிப்பு செல்வாக்குச் செலுத்தியமையும் காரணங்களாக இருந்துள்ளன.

தற்போது சூழலில் உலக நாடுகளெல்லாம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாடுகளும் தன்நாட்டு பிரஜைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கே இயலாத நிலைமையில் கண்ணுக்குத்தெரியாத எதிரியுடன் போரிட்டுக்கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ் அனைத்து உலக நாடுகளும் செவிசாய்த்தாக வேண்டும் என்ற ஆணையுடன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார்.

அதாவது, 'உலகத்தில் உள்ள அத்தனை முரண்பாடுகளையும் உடனடியாக நிறுத்திவிடுங்கள். பிரச்சனைகள்  நடைபெறுகின்ற அத்தனை மையங்களும் இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயுதப்போர்களை முன்னெடுத்து, பெரும்குழப்பங்களை முன்னெடுத்து, மக்களை காயப்படுத்தி, இடம்பெயரச்செய்து, அகதிகளாக்கும் செயற்பாடுகளை யாரும் முன்னெடுக்க கூடாது. தற்போதைய தருணத்தினை 'உலக போர் நிறுத்த தருணமாக' பிரகடனப்படுத்துகின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'கொரோனா வைரஸானது போரை நடத்துகின்ற, ஆதரிக்கின்ற நாடுகளையும், சித்தாந்த, இன, மத, மொழி முரண்பாடுகளுக்கு போரே தீர்வு என்று கருதுகின்ற நாடுகளையும் பேதமில்லாது தாக்கியுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், அகதிகள் உள்ளிட்டவர்கள் கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு பேரவலத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அப்பாலும் மனித பேரவலத்திற்கு காரணமாக இருக்கும் போர்கள் இந்த உலகத்திற்கு தேவையில்லை என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.நா செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

'ஒரிடத்தில் போர் நடைபெறுமாக இருந்தால் அங்கு ஐ.நாவின் பல கட்டமைப்புக்கள் செயற்பட வேண்டியிருக்கின்றன. இவ்வாறான  செயற்பாடுகளை தொடாச்சியாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் தற்போது ஏற்பட்டுள்ளது உலக மக்களை பாதுகாக்கும் சவாலான பணியில் ஐ.நா களமிறங்கியுள்ள நிலையில் திட்டமிட்டு உருவாக்கப்படும் போர் நிலைமைகளுக்காக தன்னுடைய காலத்தினை இழக்க முடியாது. இதனை உணர்ந்து அனைத்து நாடுகளும் செயற்பட வேண்டும்' என்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு உலகுமே நெருக்கடியில் இருக்கின்றபோது 75வருடங்களுக்கு பின்னராவது ஐ.நாவின் உண்மையான இலக்கறிந்து துணிச்சலுடன் ஐ.நா செயலாளர் பகிரங்க அறைகூறவல் விடுத்துள்ளமையானது வரவேற்கத் தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது.

ஆனால் ஐ.நாவின் பாதுகாப்புச் சபை உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பிலும் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பொதுச்செயலாளரின் யதார்த்தமான கூற்றுக்களை தன்னிலை உணர்ந்து ஏற்றுக்கொள்ளுமா என்பது மிகப்பெரும் கேள்வியாகவுள்ளது.

காரணம், இந்த ஆண்டு தனது வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் அமெரிக்கா 18 சதவீதத்தினை படையினருக்காக ஒதுக்கீடு செய்துள்ளதோடு சீனா 50 சதவீத்தினையும், ரஷ்யா 63 சதவீத்தினையும் ஒதுக்கீடு செய்துள்ளன. அமெரிக்கா நாளொன்றுக்கு 2 ஆயிரம் கோடி டொலர்களை தனது படையினருக்காக செலவிடுகின்றது.

இதனைவிடவும் அமெரிக்கா 2 மில்லியன் கலாட் படைகளையும், சீனா 207 மில்லியன் கலாட் படைகளையும், 3.6 மில்லின் கலாட் படையினரையும் கொண்டிருப்பதோடு அமெரிக்கா 4800 போர் விமானங்களையும், 5700 கவச வாகனங்களையும் கொண்டுள்ளதோடு சீனா 2300 போர் விமானங்களையும் 7800 கவச வாகனங்களையும் ரஷ்யா 2700 போர் விமானங்களையும 20300 கவச வாகனங்களையும் கொண்டிருக்கின்றன.

இதனைவிடவும் ஆயுதங்களையும் படைகளையும் கொண்டு செல்லும் விமானங்களை முறையே அமெரிக்கா 5250 சீனா 1600 ரஷ்யா 750 என்ற எண்ணிக்கையில் தம்மகத்தே வைத்துள்ளன. இவை அனைத்துமே தமது வல்லாதிக்கப்போட்டியின் ஓரங்கமாக வெளிப்படுத்தும் சமிக்ஞைகளாகவே இருக்கின்றன.

அவ்வாறான நிலையில் இத்தனை படைகளையும், தளபாடங்களையும் தம்மகத்தே வைத்திருந்தும் 'கொரோனா' எனும் வைரஸுடன் போரிட்டு வெல்லமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம் என்ற புரிதல் இந்நாடுகளுக்கு ஏற்படுமாயின் ஐ.நா பொதுச்செயலாளரின் அறைகூவலுக்கு அவை நிச்சயம் செவிசாய்க்கும். ஆனால் அந்த புரிதல் ஏற்பட்டுவிட்டதா என்பதற்கு தற்போதைக்கு விடை கிடைக்கவில்லை. 

மறுபக்கத்தில், சுவீடனில் போர் மற்றும் அமைதிக்கா பணியாற்றும் ஸ்பெரி என்ற அமைப்பானது மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம், தற்போது 27 நாடுகளில் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சிறுசிறு ஆயுதக்குழுக்களினால் அமைதிக்குலைவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக 68 மில்லின் பேர் அகதிகளாக்கப்பட்டள்ளனர் என்று கூறப்பட்டள்ளது.

கூடாரங்களில் உள்ள அகதிகளின் முகாம்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபம் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களும் எச்சரித்துள்ள நிலையில் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் போர் நடத்தியவர்களும், அதற்கு ஆதரவளித்தவர்களுமே என்பது வெளிப்படையான விடயமாகவுள்ளது.

ஆகவே உலக நாடுகளில் பேதமின்றி உயிர் குடிக்கும் கொடிய கொரோனா வைரஸானது போர் என்ற சகதிக்குள்ளிலிருந்து மீண்டெழ வேண்டியதன் கட்டாயத்தினை அனைத்து தரப்பினருக்கும் வெகுவாக உணர்த்தி நிற்கின்றது. இந்த புரிதலுடன் புதிய உலக ஒழுங்கு தோற்றம்பெற்று புதுவிதி எழுதப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.