யாழ்ப்பாணம் முற்றவெளியில் முனியப்பர் ஆலயத்துக்கு அண்மையாக யாசகம் பெற்று வாழ்ந்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக யாசகம் பெற்று தமது வாழ்வை முற்றவெளிப் பகுதியில் கழித்து வந்த முதியவர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார். எனினும் சட்ட மருத்துவ அதிகாரியில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே குறித்த யாசகரின் மரணம் தொடர்பில் உறுதியாகக் கூற முடியும் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

66 வயது மதிக்கத் தக்க வெள்ளை தலை முடிகொண்ட முதியவரே  சடலமாக  மீட்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்படவில்லை. அதனால் உறவினர்கள் யாராவது இருப்பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

“முதியவரின் சடலம் நேற்று பிற்பகல் கண்டறியப்பட்டது. அவரை அடையாளம் காண முடியவில்லை” என்று பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு கட்டளை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார், நேற்று மாலை இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை குறிப்பிட்ட நாள்களுக்குள் எவரும் உரிமை கோராதவிடத்து அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.