புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே மாதம் 3 ஆம் திகதி வரை இத்தாலி முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் என்று அந் நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் கொரோனா தொற்றாளர் இத்தாலியின் வடக்கு நகரமான கோடோக்னோவில் அடையாளம் காணப்பட்டனர். தற்போது கொரோனாவினால் உலகின் அதிகளவு மரணம் ஏற்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. 

இத்தாலி கடந்த ஒரு மாதம் தொடக்கம் கடுமையான முடக்கல் நடவடிக்கைகளை அமுல்படுத்தி வருகிறது. இந் நிலையிலேயே தற்போது மே மாதம் 3 ஆம் திகதி வரை அது நீடிக்கப்படும் என அந் நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

இத்தாலியில் வெள்ளிக்கிழமை 570 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக சிவில் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 18,849 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் அங்கு 147,577 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 30,455 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.