(எம்.எப்.எம்.பஸீர்)

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், வீடுகளில் இருந்து வெளியே வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளையில், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அனுமதி பெற்றவர்கள்  வீடுகளை விட்டு வெளியே சென்று வருகின்றனர்.

இந் நிலையிலேயே வீடுகளை விட்டு வெளியே குறுக்கு வீதிகள் அல்லது பிரதான பாதைகளுக்கு வரும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என  பொலிஸ் ஊடகப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன  பொலிஸ் தலைமையகம் சார்பில் இன்று விஷேட அறிவிப்பை வெளியிட்டார்.

மருந்தக்ங்களில் பெற்றுக்கொண்ட முகக் கவசங்கள் இல்லாதவர்கள், வீட்டில் தயாரித்த முகக் கவசங்கள்  அல்லது குறைந்த பட்சம் கைக்குட்டையால் உருவாக்கப்பட்ட முகக் கவசங்களையேனும் குறுக்கு மற்றும் பிரதான பாதைகளுக்கு வரும் போது அணிந்திருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 ' தற்போதும் சுகாதாரத்துறையினர், முப்படை, பொலிஸார் மற்றும் அரச ஊழியர்களின் ஒரு பகுதியினர் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காக்கும் நோக்கிலும் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இந்த கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

பல பொது மக்களின்  பொறுப்பற்ற செயற்பாடுகளால் இவ்வாறு தொடர் சேவையில் உள்ளவர்கள் பலர் இன்று சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். 

எனவே  இனி மேல் குறுக்கு வீதிகள் மற்றும் பிரதான வீதிகளுக்குள் வரும் அனைவரும் முகக் கவசம் ஒன்றினை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்' என பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.