தமிழகத்தில், மனைவிக்கு  உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவரை சைக்கிளில் வைத்து 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற கணவரை, மக்கள் வெகுவாக பாராட்டினர்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் (65), இவரது மனைவி மஞ்சுளா (60). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளாவை புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அறிவழகன் முடிவு செய்தார்.இதற்கிடையே, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஆனாலும், எப்படியாவது தனது மனைவிக்கு சிகிச்சையளித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருந்த அறிவழகன், மஞ்சுளாவை சைக்கிளில் ஏற்றி புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.

இதையடுத்து, மனைவியை சைக்கிளில் அமரவைத்து சீர்காழி, கடலூர் வழியாக 120 கிமீ தூரம் கடந்து, புதுச்சேரி ஜிப்மர் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்தார்.

இடுப்பில் வேஷ்டியும் தோளில் துண்டுமாக வந்த அறிவழகனின் ஏழ்மை நிலையையும், மனைவியை காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியையும் கண்டு மனம் இறங்கிய வைத்தியர்கள், மஞ்சுளாவை வைத்தியசாலையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

இருவருக்கும், ஜிப்மர் வைத்தியசாலை நிர்வாகம் சார்பிலும், தன்னார்வலர்களின் உதவியின் பேரிலும் உணவு மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டது.

மூன்று நாட்கள் வைத்தியவாலையில் தங்க வைத்து மஞ்சுளாவுக்கு உரிய சிகிச்சை அளித்த பின்னர், இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி கும்பகோணத்திலுள்ள அவர்கள் வீட்டில் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளனர்.

மஞ்சுளாவுக்கு அளித்த சிகிச்சைக்காகவும், அவர்களை கும்பகோணம் கொண்டுசேர்த்த அம்பியூலன்ஸிற்காகவும்  ஜிப்மர் வைத்தியசாலை நிர்வாகம் எந்த கட்டணமும் வாங்கவில்லை என்பதுவும் குறிப்பிடதக்கது.