(நா.தனுஜா)

பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்வதும் அவசியமாகும்.

தற்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்தாலும் கூட, பொருளாதாரத்தை மீட்கமுடியாத நிலையே ஏற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக எச்சரித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமளிக்கக்கூடியவாறான அறிவுறுத்தல்கள் மத்திய வங்கியினால் ஏனைய அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பினும் கூட, அவை இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் கடன் வழங்கல், கடன்களை மீள வசூலித்தல் உள்ளிட்ட அனைத்தும் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இடம்பெற வேண்டியது அவசியமாகும்.

தற்போது காணப்படும் நெருக்கடி நிலையில் மத்திய வங்கி எத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும், அது சாதாரண பொதுமக்களைச் சென்றடையவில்லை எனின்,  அதன்மூலமாகப் பாதிப்புக்களே ஏற்படும்.

அடுத்ததாக எமது ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. பொருளாதாரம் முற்றிலும் ஸ்தம்பிதமடைந்திருக்கிறது.  இதனைச் சீர்செய்வதற்கு நடைமுறைச் சாத்தியமுள்ள செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசனை செய்தும் அவசியமாகும்.

தற்போது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறும் பட்சத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு வந்தாலும கூட, பொருளாதாரத்தை மீட்கமுடியாத நிலையே ஏற்படும்.

அதேபோன்று இந்த நெருக்கடி நிலையில் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தடுக்கவேண்டும்.  அதனால் அப்பாவி பொதுமக்கள் மாத்திரமே பாதிக்கப்படுகின்றனர்.