(எம்.மனோசித்ரா)

நிறுவன ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியிலும் கிடைக்கப்பெறும் அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 609 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி தாபிக்கப்பட்டது.

அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க தேரரும், லொஸ் என்ஜல்ஸ் நகரின் தர்மவிஜய விகாரை மற்றும் பாமங்கட ஸ்ரீமஹா விகாரையின் விகாராதிபதி சர்வதேச சமய அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் அக்கமகா பண்டித கலாநிதி வல்பொல பியனந்த நாயக்க தேரரின் கோரிக்கையின் பேரில் வியட்நாம் - அமெரிக்க பௌத்த சம்மேளனத்தின் தலைவர் திக் வீன் லீ தேரர் 15,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பு செய்துள்ளார்.

அந்நிதியை வல்பொல பியரத்ன தேரர் சர்வதேச உறவுகளுக்கான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகேயிடம் கையளித்தார்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்ட பூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

0112354479,0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.