(ஆர்.யசி)

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும், மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டையும் நாடு சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் இந்தியா வசமுள்ள திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கத்தின் அனுமதியை கோருகின்றது இலங்கை அரசாங்கம். 

அத்தோடு தெரிவுசெய்ய அவசியமான மருந்து  வகைகளையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அதன் தலைவர் உபாலி இத்தேவன்ச கூறுகையில் :- 

இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களில் 80 வீதமான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். ஒரு சில மருந்துகளை மட்டுமே இலங்கையில் உற்பத்தி செய்யக்பட்டது.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவியதை அடுத்து மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து 80 வகையான மறந்துப் பொருட்களை இலங்கையில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சான்றிதழை பெற்று 80 வகையான மறந்து பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது.

எனினும் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் எமக்கு அதிக மருந்துகள்  தேவைப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் இருந்து மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே எமக்கு அதிய மருந்துகளை வழங்குகின்றது. விரைவில்  நாட்டுக்கு தேவையான மருந்துகளை அரசாங்கம் இறக்குமதி செய்ய  நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்றார்.

இந்நிலையில் இலங்கைக்கான எரிபொருள் பாவனையிலும் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு ஆண்டுக்கு இலங்கைக்கான மொத்த எரிபொருள் இறக்குமதியில் இப்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் திணைக்களம் கூறுகையில்,

ஒரு ஆண்டுக்கு மொத்தமாக ஆறாயிரம் மெற்றிக் தொன் எரிபொருள் நாட்டுக்கு தேவைப்படும். ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்கள் இடைவெளியில் எரிபொருள் இறக்குமதி செய்யப்படும். இப்போது நாட்டில் எழுந்துள்ள பொருளாதார நெருக்கடியில் எரிபொருள் களஞ்சியப்படுதல் முறைமையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் 50 வீதமான எண்ணெய் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வாகனங்களுக்கு வழங்க வேண்டிய எரிபொருள் பாவனைக்கு அப்பால் 40 வீதமான எரிபொருள் மின்சார உற்பத்திக்கு வழங்க வேண்டியுள்ளது. ஆகவே இப்போதுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது. 

எனவே  மிதக்கும் களஞ்சியங்கள் இரண்டை கொண்டுவர தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டி திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து தற்காலிகமாக பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவற்றில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் அரசாங்கம் இவற்றை கையாள முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்னவென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவியபோது அவர் கூறுகையில். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாட்டை அடுத்து அரசாங்கம் மாற்று நடவடிக்கைகளை கையான வேண்டியுள்ளது. குறிப்பாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்ய துரித வேலைத்திட்டங்களை இப்போது முன்னெடுத்தாக வேண்டும். மருந்துப் பொருட்களை பொறுத்தவரை இறக்குமதி செய்ய வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் இருந்தும், சீனாவில் இருந்தும் மறந்து வகைகள் சில கொண்டுவரப்படவுள்ளன. கடந்த வாரமும் சில வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டது. அடுத்து வரும் வாரங்களிலும் சில வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும்.

அதேபோல் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் உள்ளது. 

எனவே எரிபொருள் கப்பல்கள் இரண்டை இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோல் எரிபொருள் களஞ்சியங்களை முறையாக கையாள வேண்டும். இப்போதுள்ள களஞ்சியங்கள் போதுமானதாக இல்லை. எனவே திருகோணமலை எண்ணெய் குதங்களில் 20 குதங்களை இந்தியாவிடம் இருந்து தற்காலிகமாக பெற்றுகொள்வது குறித்து இந்திய அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. அவற்றை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு எமக்கு தேவையான எண்ணெய்யை களஞ்சியப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறோம் என்றார்.