(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று பரவாது இருப்பதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறான நெருக்கடியான நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பொலிஸார் சந்தேக நபர்களை கைதுசெய்து வருகின்றனர்.

அதற்கமைய நேற்று வியாழக்கிழமை பொலிஸாரும் , கலால் படையினரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் கோடாக்களுடன் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிட்டம்புவ பொலிஸ் பிரிவக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 10 இலட்சத்து 84 ஆயிரம் கோடாக்கள்  (6 பீப்பாய்கள்) மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரும் கைத செய்யப்பட்டுள்ளார்.

இம்புல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  மிஹிந்தலை - வெல்லாரகம பிரதேசத்தின் வனப்பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபடபட்டிருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவரிடமிருந்து சட்டவிரோத மதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் 215 லீட்டர் கோடாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை எல்பிட்டி பகுதியில் கலால் படையினரின் சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.