(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் தமக்கான பாதுகாப்பு ஆடைகள் , முகக்கவசங்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட 8 பிரதான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை சுகாதார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்று சங்கத்தினால் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

கொரோனா வைரஸ் தொற்றுடன் சுகாதாரத்துறை ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அவ்வாறான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்குவதோடு வைரஸ் பரவலையும் முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சுகாதாரத்துறையினருக்கு தேவையான பாதுகாப்பு ஆடைகள் , முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அத்தோடு சுகாதார சேவையில் 180 நாட்களை நிறைவு செய்துள்ள மாற்று நேர ஊழியர்களை நிரந்த சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாற்று நேர தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் பட்சத்தில் ஏனைய அரச ஊழியர்களுக்கு கிடைக்கப் பெறும் வரப்பிரசாதங்களை இவர்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

அனைத்து சுகாதார சேவை நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவை தடையின்றி பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தல். அத்தோடு விடுமுறை தினங்களில் பணியில் ஈடுபடுவோருக்கு மேலதிக வேலை நேரத்துக்கான கொடுப்பனவை வழங்குதல்.

வங்கிக் கடன் பெறும் போது 10 இலட்சம் கடனைப் பெற்றுள்ளவர்களுக்கு மீள் செலுத்துவதற்கான தவணைக் கட்டணத்தை குறைப்பதோடு, கடன் தொகை 20 இலட்சம் வரையில் அதிகரிக்கப்பட வேண்டும். சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள பலர் 10 இலட்சத்திற்கும் அதிகளவு கடனைப் பெற்றுள்ளதோடு அவர்களுக்கு தொழில் அற்றுப் போயுள்ளதோடு மேலதிக வேலை நேரத்துக்கான கொடுப்பனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இந்த கோரிக்கைக்கான பிரதான நோக்கமாகும்.

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தடையின்றி செய்து கொடுக்கப்பட வேண்டும். அத்தோடு பணிகளை சிறந்தமுறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு வைத்தியசாலை பிரதானிகளின் ஆலோசனைகள் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பெற்றுக கொள்ள வேண்டிய தெளிவூட்டல்களை அவர்கள் தடையின்றி பெற்றுக் கொள்ள வேண்டும்.

வைரஸ் ஒழிப்பிற்கான வேலைத்திட்டங்களில் எமது ஒத்துழைப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என்பதோடு , மேற் கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வினைப் பெற்றுக் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.