ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில்  சட்ட விரோதமான முறையில் வாகனமொன்றில் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு தொகுதி மதுபானப் போத்தல்களை கல்குடா பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

பாசிக்குடா பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இருந்து  மட்டக்களப்பிற்கு  வாகனமொன்றில் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் கும்புறுமூலை என்னும் இடத்தில்  பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து இச் சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி குறிப்பிடுகின்றார்.

சந்தேக நபரும் வாகனமும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி சி.ஜ.சந்தனவிதானகே தெரிவித்தர்.

தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஜ.பி. நாகரத்ன விதானகே தலைமையில் சார்ஜன் ஏ.எம். அசோக, மற்றும் பி.சி.ஜனார்த்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் மதுபானகடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசு தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.