சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பி வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக  நடிக்கிறார். பி வாசு இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்கிறார்.

இப்படத்திற்காக முற்பணமாக பெற்றுகொண்ட ரூபா மூன்று கோடியை கொரோனா  நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார் நடிகர் ராகவா லோரன்ஸ்

இதுகுறித்து ராகவா லோரன்ஸ் பேசுகையில்,

' எம்முடைய தலைவர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசியுடன் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். இப்படத்தை எம்முடைய ராசியான தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்க, பி வாசு இயக்குகிறார்.

இப்படத்திற்காக மூன்று கோடி ரூபாயை அட்வான்சாக பெற்றுக் கொண்டேன். அந்த தொகையை கொரோனா தடுப்பிற்கான தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்ச ரூபாயும், திரைப்பட தொழிலாளர் சங்கமான பெப்சிக்கு 50 லட்ச ரூபாயும், எம்மைச் சார்ந்த தென்னிந்திய நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்ச ரூபாயும், நான் பிறந்த ராயபுரம் பகுதியில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க 75 லட்ச ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிப்பதற்காக 25 லட்ச ரூபாயும் வழங்குகிறேன்'. என்றார்.

'சந்திரமுகி' முதல் பாகத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் அவரே நடிக்க கூடும் என்று தெரியவருகிறது. இதனிடையே ராகவா லோரன்ஸ் தற்பொழுது 'காஞ்சனா-2' படத்தை ஹிந்தியில் 'லக்ஷ்மி பாம்' என்ற பெயரில், அக்ஷய் குமார் நடிப்பில், இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது