மத்திய ஆபிரிக்க நாடான சாட் டின் மேற்கு பகுதியில் போகோஹராம் தீவிரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் சுமார் ஆயிரம் பேகோஹராம் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.

சாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

மார்ச் 31 ஆம் திகதி சாட்டின் எல்லைப் பகுதிகளிலும், நைஜர் மற்றும் ‍நைஜீரியாவின் பகுதிளிலும் ஆரம்பிக்கப்பட்ட பேகோஹராம்  தீவிரவாதிகளுக்கு எதிரான இந்த தாக்குதல் நடவடிக்கையானது புதன்கிழமை முடிவடைந்துள்ளது.

இந்த தாக்குதல் நடவடிக்கையில் 52 சாடியன் இராணுவத்தினர் உயிரிழந்ததுடன், அனைத்து தீவிரவாதிகளும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐந்து இராணுவக் குழுக்களை எல்லை தாண்டிய பகுதிகளுக்கு அனுப்பிய சாடியன் இராணுவம், நைஜர் மற்றும் நைஜீரியாவில் தீவிரவாத குழுவைச் சேர்ந்த ஐந்து தளங்களை அழித்துள்ளது.

மார்ச் 23 ஆம் திகதி சாட் இராணுவத்தினரை இலக்கு வைத்து பேகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 92 சாடியன் வீரர்கள் கொல்லப்பட்டதுடன், பொது மக்கள் பலரும் பலியாகியிருந்தனர்.

இந் நிலையிலேயே கடந்த புதன்கிழமை பேகோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பேகோஹராம் 2009 ஆம் ஆண்டில் வடகிழக்கு நைஜீரியாவில் கிளர்ச்சியைத் தொடங்கியது, அதன் பின்னர் அவர்களில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது  அண்டை நாடான நைஜர், சாட் மற்றும் கமரூன் ஆகிய நாடுகளுக்கும் பரவியது.

நைஜீரியாவில் ஒரு தசாப்த கால பேகோஹராம் பயங்கரவாத நடவடிக்கைகளில் 30,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 3 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் ஒருங்கிணைப்புக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பேகோஹராமின் வன்முறை ஏரி சாட் பிராந்தியத்தில் சுமார் 26 மில்லியன் மக்களை பாதித்துள்ளதுடன் 2.6 மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளதாகவும் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Photo Credit : aljazeera