யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி பிரதேசத்தில் தனித்திருந்த வயோதிபத் தம்பதியை கூரிய ஆயுதங்களால் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் சாவகச்சேரி மட்டுவில், சோலை அம்மன் கோவிலடியில் இன்று (10.04.2020) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டில் காணப்பட்ட கோடரி உட்பட்ட கூரிய ஆயுதங்களை எடுத்து கதவுகளை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

உள்ளே இருவர் மட்டும் சென்றதாகவும் அவர்கள் வயோதிபத் தம்பதியை மிரட்டியதுடன், அங்கிருந்த நகைகளை திருடியதுடன் வயோதிபப் பெண் அணிந்திருந்த தோடு உட்பட்ட அனைத்து நகைகளையும் கழற்றிச் சென்றதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.