கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்த மேலும் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இதுவரை இலங்கையில் மொத்தமாக 190 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி நாட்டில் 21 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தினமும் 10 அல்லது அதற்கும் குறைவான புதிய கொரோனா தொற்றாளர்களே நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வந்தனர்.

இந் நிலையில் நேற்றைய தினம் ஒருவர் மாத்திரம் புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

அதன்படி கடந்த மூன்று மாதங்களில் நாட்டில் 190 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் அவர்களில் 50 பேர் தற்போது சிகிச்சையின்  மூலம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 

அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீதமுள்ள 133 பேரும் தற்போது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை,  கொழும்பு கிழக்கு (முல்லேரியா) ஆதார வைத்தியசாலை மற்றும் வெலிகந்த ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.