உலக வாழ் கிறிஸ்தவ பெருமக்கள் இன்றைய தினத்தை (10.04.2020) புனித வெள்ளியாக அனுஷ்டிக்கின்றனர்.

இயேசுவின் மறைவே புனித வெள்ளியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து வரும் ஞாயிற்றுகிழமை அவர் உயிர்த்தெழுந்த நாளாக 'ஈஸ்டர் சன் டே' எனப்படுகிறது.

அவர் இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்று அனுஷ்டிக்கின்றனர் கிறிஸ்தவர்கள்.

அவர் இறந்த நாளுக்கு முன்புள்ள 40 நாட்கள் 'தவக்காலம்' எனப்படும். இதில் சுகபோகத்தை வெறுத்து உபவாசம் மேற்கொள்கின்றனர். ஆடம்பரம், அலங்காரத்தை தவிர்த்து, அர்ப்பணம் மிக்க வாழ்வு நடத்துவர். மங்கல நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. இதில் எஞ்சிடும் பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்வர்.

40 நாட்களை உள்ளடக்கியதான தவக்காலத்தின் மிக முக்கிய பகுதியான புனிதவாரம், கடந்த குருத்தோலை ஞாயிறுடன் ஆரம்பமானது. இன்றைய புனித வெள்ளி தினத்தில் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்கள் உண்னா நோண்பிருந்து ,இயேசுவின் பாடுகள், மற்றும் மரணம் என்பவற்றை தியாணிப்பார்கள்.

இதேவேளை, இலங்கை உட்பட உலக நாடுகளை ஆட்கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு புனித வார ஆன்மீக நிகழ்வுளை தமது வீடுகளில் இருந்து அனுஷ்டிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்க மக்களை கேட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

இதற்கு அமைவாக இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் பக்தர்கள் ஒன்றுகூடும் ஆராதனைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

நாடளாவிய ரீதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் குருக்கள், துறவிகள் கலந்து கொள்ளும் புனித வெள்ளி ஆராதனைகளை பக்தர்கள் ஊடகங்கள், சமூக ஊடகங்கள், ஒலிபெருக்கிகள் மூலமாக பார்ப்பதற்கும் செவிமடுப்பதற்குமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.