(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சமூகவலைத்தலங்களின் ஊடாக போலிப் பிரசாரம் வழங்கிய ஒன்பது சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உறுதியான செய்திகளை மாத்திரமே வெளியிடுமாறும், போலி பிரசாரங்களை வழங்குபவர்களை கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கைககளை எடுப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவ்வாறு போலிப்பிரசாரம் செய்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் பண்டாரகம, கண்டி, தெஹிவலை, மாஹரகம, நுகேகொட, காலி, வாத்துவ, அங்கொட மற்றும் பொல்காஹவெல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.