(இராஜதுரை ஹஷான்)

கடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய தேவை கிடையாது. இவ்வாறு எந்தவகையிலேனும் பாராளுமன்ற அமர்வை நடத்தி விட வேண்டும் என்ற முயற்சியில் எதிர்க்கட்சிகள் செயற்பட தொடங்கியுள்ளன. பொதுத்தேர்தல் இடம் பெற்று புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரையில் பாராளுமன்றம் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.அரசாங்கம் பாராளுமன்றத்தை கூட்டி அரச கடன் பெறும் எல்லையை அதிகரிக்க யோசனையொன்றை முன்வைக்குமாறு எதிர் தரப்பினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அரசாங்கம் தற்போதைய நிலையில் கடன்பெறும் எல்லையை அதிகரிக்க பாராளுமன்றத்தை கூட்டி யோசனையொன்றை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டுக்குள்  ஊடுறுவதற்கு முன்பாகவே  தூர நோக்கத்தை  கருத்திற் கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் கணக்கு வாக்கெடுப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

எதிர்க்கட்சியாக செயற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் அப்பிரேரனைக்கு ஆதரவு வழங்கவில்லை. தற்போது பிரேரணையை கொண்டுவருமாறு குறிப்பிடுவது பயனற்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நிதி தொடர்பான  அதிகாரம் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினர் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் நிதி அதிகாரத்தை கொண்டு அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு  தீர்வு கண்டதன் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும், பொதுத்தேர்தல் இடம் பெற்று புதிய அரசாங்கம் தோற்றம் பெறும் வரையில் பாராளுமன்றம் கூடாது என்றார்.