கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாடு தழுவிய ஊரடங்குச்சட்டம் பிரப்பிக்கப்பட்டுள்ளதால்,  சுமார் 5000 பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குமாறும் கோரி இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 

இலங்கை தொழிலாளர் செங்கொடிச் சங்கத்தின் ஆலோசகர் மேனகா கந்தசாமி அனுப்பியுள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேயிலை மற்றும் இறப்பர் தொழிற்துறை சார்ந்த தமது தொழிற் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களதும் அத்துடன் கொழும்பு போன்ற இடங்களில் அடைப்பட்டுள்ள வீட்டு வேலைத் தொழிலாளர்களதும் நலன் சார்பாகவும் இவ்வேண்டுகோளை விடுப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதாவது 2020 ஏப்ரல் மாதம் அரச பெருந்தோட்டக் கூட்டுத் தாபனம் மற்றும் மக்கள் பெருந்தோட்டக் கூட்டுத் தாபனம் (SLSPC) மற்றும் (JEDB)  என்பவற்றைச் சேர்ந்த தொழிலாளர்களது ஏப்ரல் மாத சம்பளத்தில், கூட்டு ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டவாறு மொத்த சம்பளத்தை வழங்குவதுடன் அதில் எந்தவிதமான கழிவுகளும் இன்றி செலுத்த வழிநடத்தும்படி கேட்டுள்ளார்.

ஏனெனில் மேற்படி தோட்டத்தொழிலாளர்கள் தற்போதைய ஊரடங்கு காரணமாக பாரிய நெருக்கடியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதே போல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களது முழுமாத ஊதியத்தையும் (25 நாட்களஞக்கு) எந்தவிதமான கழிவும் இன்றி வழங்குவதை  உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

கொழும்பு போன்ற பிற மாவட்டங்களில் உள்ள வீட்டு வேலைத் தொழிலாளர்கள் மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மலையக பிரதேசங்களைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். 

தற்போது பெருந்தோட்டத் துறையில் வேலை செய்யும் இடங்களில் கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது தொடர்பான சமூக இடைவெளி மற்றும் சுகாதாரத் தேவைகளை பூர்த்திசெய்ய போதுமான சுகாதார மற்றும் தொழில்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்  ஒழுங்கு முறைகள் என்பன  உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதில் அவர் கேட்டுள்ளார்.