(நா.தனுஜா)

கொவிட் - 19 கொரோனா வைரஸிற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியிருக்கிறது.

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணியின் கூட்டத்தொடர் நேற்று (08.04.2020) பசில் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போதே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் 22 மில்லியன் யூரோக்களை வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்து, இங்கு தங்கியிருக்கும் சுற்றுலாப்பயணிகளை மீளவும் பாதுகாப்பாக அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சுகாதார, பொருளாதாரத் துறைகள் சார்ந்து எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுதல் என்பன தொடர்பில் இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.