அசோசியேட்டட் பிரஸ்

நவம்பர் தேர்தலிற்கான களம் தயாராகியுள்ளது

ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோபிடென் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது,எதிர்பாராத இடர்கள் எதுவும் ஏற்பட்டால் மாத்திரமே இந்த நிலை மாறும்.

அவர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை எதிர்த்து போட்டியிடுவார்.

பேர்னி சான்டெர்ஸ் தனது பிரச்சாரத்தினை முடிவிற்கு கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதை தொடர்ந்தே இந்த நிலை உருவாகியுள்ளது.

யூன் வரையில்  தேர்தலில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுவதற்கு அவசியமான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஜோ பிடெனிற்கு கிடைக்காது.

ஆனால் ஜனநாயக கட்சியை சேர்ந்த எவரும் போட்டியிடுவதற்கு இல்லாத நிலையில் அவரே வேட்பாளர் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்காவின் மிகவும் செலவு கூடிய மோசமான தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகிவிட்டது.

இது இலகுவானதாகயிராது,எவருக்கும் அது குறித்த குழப்பங்கள் தேவையில்லை,ஆனால் நாங்கள் தேர்தலிற்கு தயாராகிவிட்டோம் என தெரிவித்துள்ள ஜனநாயக கட்சியின் தேர்தல் குழுவின் தலைவர் டொம் பிரெஸ் எங்களின் சார்பில் போட்டியிடுபவரிற்காக நாங்கள் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடெனின் விழுமியங்கள் பெரும்பான்மையான அமெரிக்கர்களின் விழுமியங்களை பிரதிபலிக்கின்றன என நான் கருதுகின்றேன்,இதன் காரணமாக நாங்கள் வெற்றிபெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் ஜோ பிடென் இருவர் மத்தியிலிருந்தும் சுகாதாரம்,காலநிலை மாற்றம், வெளிவிவகார கொள்கை,தலைமைத்துவம் போன்றவை குறித்து முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை கொண்ட ஒருவரை அமெரிக்க மக்கள் தெரிவு செய்யப்போகின்றனர்.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்டவர்களில் அதிக வயதுடையவராக 77 வயது ஜோபிடென் விளங்கப்போகின்றார்.

நியாயமான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் கலவையாக டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் காணப்படுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் அவர் சதிமுயற்சி குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றார்.நான்கு வருடங்களிற்கு முன்னர் ஹிலாரிக்கு எதிராக இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்தி அவர் எதிர்பாரத வெற்றியை பெற்றிருந்தார்.

ஜோபிடென் அதிகளவு தாராளவாதியாக சித்தரிக்கப்படுவார் என டிரம்பின் பிரச்சார பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரது மகனின் வெளிநாட்டு வர்த்தக தொடர்புகள் மற்றும் அவரது வயதிற்கான மனச்சோர்வு குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜோ பிடெனை டிரம்ப் தேர்தலில் அழித்துவிடுவார் என அவரது பிரச்சார முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஜோ பிடெனை டிரம்ப் குழுவினர் ஸ்லீபி ஜோ என அழைக்கின்றனர்.