இரத்தினபுரி, பெல்மதுளை பகுதிகளில் இன்று ஊரடங்கு தளர்த்தப்படாதெனவும் குறித்த பகுதிகளில் பயணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இரத்தினபுரி மாவட்டத்தில்  நேற்றையதினம் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது தொடர்பாடல் வலையமைப்பு தொடர்பில் விசாரணைகள், தேடல்கள் இடம்பெறுகின்றன. 

இந் நிலையில் இன்று காலை 6.00 மணிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்,  அம்மாவட்டத்தின் இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தளர்த்தப்படாது.  

அவ்விரு பொலிஸ் பிரிவுகளிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடரும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில் ஊரடங்கு  இன்று 9 ஆம் திகதி காலை 6.00 மணி முதல்  மாலை 4.00 மணி வரை தளர்த்தப்பட்டிருக்கும் காலப்ப்குதியிலும் அதன் பின்னரும் இரத்தினபுரி, பெல்மதுளை பொலிஸ் பிரிவுகள் ஊடாக எந்த வாகன போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (09.04.2020) வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 04.00 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்படவுள்ளது.

இம்மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் இம்மாதம் 14 செவ்வாய்கிழமை காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் புத்தாண்டு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.