மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள்  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின்  ஊடாக அன்றி   நேரடியாக திறைசேரியினால் நிதி ஒதுக்கப்படவுள்ளன.  அதற்காக   2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை    திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது  என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

மேலும்   மாகாண சபைகளும்   மத்திய அரசாங்கமும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஒருங்கிணைப்புடன் செயற்படுவதற்கும் முதலமைச்சர்களும் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது  எனவும்  அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின்  ஊடாக அன்றி   நேரடியாக திறைசேரியினால் நிதி ஒதுக்கீடு  செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதற்காக   2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை    திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது 2015 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

ஜனாதிபதி தலைமையில் நேற்று  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டின் அனைத்து முதலமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனும் இதில் கலந்து கொண்டிருந்தார். 

மாகாண சபையின் நடவடிக்கைகள் பலனுள்ள வகையிலும் செயற்திறன் மிக்கதாகவும் செயற்படுவதற்கு காணப்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் முதலமைச்சர்களுடன்  அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.